×

தமிழகத்தில் 6 மாநிலங்களவை எம்பி பதவிக்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பதில் இழுபறி

சென்னை: தமிழகத்தை சேர்ந்த 6 மாநிலங்களவை எம்பி பதவிக்கு போட்டியிட இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. திமுக சார்பில் 3 வேட்பாளர்கள் அறிவித்துள்ள நிலையில், அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. அதிமுகவின் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக உள்ள முத்துக்கருப்பன், விஜிலா சத்தியானந்த், செல்வராஜ் மற்றும் அண்மையில் பாஜகவில் இணைந்த சசிகலா புஷ்பா ஆகியோரின் பதவிக்காலமும், திமுகவின் திருச்சி சிவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ரங்கராஜன் ஆகிய 6 பேரின் பதிவி காலம் வரும் ஏப்ரல் 2ம் தேதியுடன் முடிவடைகிறது.

இதையடுத்து, 6 மாநிலங்களவை எம்பிக்களை தேர்ந்தெடுக்க வருகிற 26ம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், தேர்தலில் போட்டியிடுகிறவர்கள் மார்ச் 6ம் தேதி (இன்று) முதல் 13ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மாதம் அறிவித்தது.
தமிழகத்தில் ஒரு மாநிலங்களவை எம்பியை தேர்ந்தெடுக்க 34 எம்எல்ஏக்கள் வாக்களிக்க வேண்டும். அதன்படி, அதிமுகவுக்கு 124 எம்எல்ஏக்கள் உள்ளனர். திமுகவுக்கு 98 எம்எல்ஏக்கள் மற்றும் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு 7, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 என மொத்தம் 106 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. அதனால் அதிமுக 3, திமுக 3 மாநிலங்களவை எம்பிக்களை தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளது.

அதன்படி மாநிலங்களவை எம்பிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர்களாக திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ ஆகிய 3 பேர் பெயரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்துள்ளார். ஆனால், அதிமுக வேட்பாளர்கள் யார் என்பது குறித்து கட்சி தலைமை இன்னும் அறிவிக்கவில்லை. இன்று காலை 11 மணி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கும் நிலையில், அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்காதது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளதாக அக்கட்சி தொண்டர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

வேட்பாளர்கள் அறிவிக்காததற்கு காரணம், அதிமுக கூட்டணி கட்சிகளாக தேமுதிக, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், புதிய நீதிக்கட்சி ஏ.சி.சண்முகம் உள்ளிட்டோர் சீட் கேட்டு கட்சி தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வருவதே காரணம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, தேமுதிக பொருளாளர் பிரேமலதா, எங்கள் கட்சிக்கு ஒரு எம்பி சீட் அதிமுக தர வேண்டும் என்று நேரடியாக பத்திரிகைகள் மூலம் கோரிக்கை வைத்து வருகிறார். இதுபோன்ற தர்ம சங்கடமான நிலையில், அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பதில் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டுள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், அதிமுகவின் ஆட்சி மன்ற குழு கூட்டம் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடப்பதாக இருந்தது. ஆனால் கூட்டம் கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது. அதிமுக ஆட்சிமன்ற குழு கூட்டம் இன்று அல்லது நாளை மறுதினம் நடைபெறும் என்றும், இதையடுத்து அதிமுக ஒழுங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இணைந்து அதிமுக வேட்பாளர்களை நாளை மறுதினம் (8ம் தேதி) அறிவிக்கப்பார்கள் என்று தெரிகிறது. அதிமுக சார்பில் தேமுதிகவுக்கு மாநிலங்களவை எம்பி சீட் வழங்க மூத்த நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், தேமுதிகவுக்கு மாநிலங்களவை எம்பி சீட் வழங்க வாய்ப்பு இல்லை என்று கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

10 எம்எல்ஏக்கள் முன்மொழிய வேண்டும்
தமிழகத்தில் மாநிலங்களவை எம்பி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று (6ம் தேதி) முதல் 13ம் தேதி வரை ஞாயிறு தவிர மற்ற நாட்களில் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை சென்னை, தலைமை செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் மனு தாக்கல் செய்யலாம். வேட்புமனு தாக்கல் செய்பவர்கள் டெபாசிட் தொகையாக 10 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்சி.,எஸ்டி பிரிவினராக இருந்தால் 5 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும். ஒரு வேட்பாளரை 10 எம்எல்ஏக்கள் முன்மொழிந்து கையெழுத்து போட வேண்டும். இல்லையென்றால் அந்த வேட்புமனு பரிசீலனையின்போது தள்ளுபடி செய்யப்படும்.

Tags : AIADMK ,State ,MPs ,Rajya Sabha , 6 states MP, nomination file, today, start
× RELATED சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில்...